BREAKING : பாட்டியாலா முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் நவஜோத் சிங் சித்து…!
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, பாட்டியாலா அமர்வு நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்துள்ளார்.
கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே ஜீப்பை சாலையில் நிறுத்தியதாக ஏற்பட்ட மோதலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, குர்னாம் சிங் என்ற நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நபர் பின்னர் இறந்துவிட்டார். இதனால் அப்போது, சித்து மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, 1999 இல், பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் சரியான ஆதாரம் இல்லாததால் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்தது. ஆனால், 2006-ல் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, சித்து குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 34 வருடங்களுக்கு பிறகு சித்து குற்றவாளி என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டது.
இதன்பின், உடல் நல காரணங்களுக்காக சரணடைய சில வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், சரணடைய சில வாரங்கள் அவகாசம் கேட்டு நவ்ஜோத் சிங் சித்து கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, பாட்டியாலா அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.