#BREAKING : பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு…!
சஞ்சய் தத் முன் விடுதலை குறித்த ஆவணங்களை கோரும் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 1993-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். 2013-ஆம் ஆண்டு அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, பின் ஐந்து ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது.
மேலும் அவருக்கு சிறையில் இருந்தபோது பல முறை பரோலும் வழங்கப்பட்டது. இறுதியில் இவர் சிறைவாசம் முடிவதற்கு 256 நாட்களுக்கு முன்பதாகவே விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சஞ்சய் தத் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக அறிந்து கொள்ள பேரறிவாளன் தரப்பினர் விரும்பினர். இதனையடுத்து, இது சம்பந்தமாக உத்தரவுகளை மகாராஷ்டிரா அரசு பிறப்பிக்க கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மும்பை உயர்நீதிமன்றமானது மகாராஷ்டிரா அரசு உரிய பதிலளிக்க கூறியிருந்தது. இந்நிலையில், சஞ்சய் தத் முன் விடுதலை குறித்த ஆவணங்களை கோரும் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட, உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கானது அடுத்த வாரம் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.