#BREAKING : பிரதமருடனான சந்திப்பு மனநிறைவை அளிக்கிறது…!- முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமருடனான சந்திப்பு மனநிறைவை அளித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனை தொடர்ந்து, சாணக்கியாபுரத்தில் இருக்கக் கூடிய தமிழ்நாடு பொதிகை இல்லத்தில், காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், திமுகவை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பானது பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது 25நிமிடங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
அதன்பின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொரோனா பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை முன்கூட்டி சந்திக்க இயலவில்லை. போனவுடனேயே முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நான் நன்றி தெரிவித்தேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார். என்ன கோரிக்கையாக இருந்தாலும் என்னுடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என வெளிப்படையாக தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களையும், கோரிக்கைகளையும் முழுமையாக தயாரித்து பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளோம்.
தலைப்பு செய்தியாக உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழகத்திற்கு கூடுதலான தடுப்பூசி வழங்க வேண்டும். செங்கல்பட்டு, ஊட்டி இருக்கக்கூடிய தடுப்பூசி தொழிற்சாலையை உடனடியாக செயல்பட வைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
ஜிஎஸ்டி வரி பாக்கி தொகை தமிழகத்திற்கு முழுமையாக கொடுக்க வேண்டும். நீர் பிரச்சனை, நீட் தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துளோம். மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளோம். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும், கோதாவரி-காவேரி இணைப்பு, காவிரி – குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
இலங்கை கடற்படையினரின் தொல்லைக்கு உள்ளாகி, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு,ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். புதிய மின்சார திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்து முயற்சிக்க வேண்டும்.
மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டிருக்கான இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துளோம்.
ஈழத்தில் இருந்து வந்து, அகதிகளாக வாழும் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். சேது சமுத்திர திட்டம் அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
ஒன்றிய அரசும், தமிழக அரசும் இணைந்து கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையை எனது டெல்லி பயணம் எனக்கு கொடுத்துள்ளது. முன் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். அப்படி அழுத்தம் கொடுக்கும் போது, தலைநகரில் உள்ள தமிழ் ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.