#BREAKING: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை – பாரூக் அப்துல்லா அறிவிப்பு!
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்த பாரூக் அப்துல்லா.
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பாரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்து பாரூக் அப்துல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எதிர்க்கட்சி பொது வேட்பாளராக என்னை கருத்தில் கொண்டு எனக்கு ஆதரவளித்து, எனது பெயரை முன்மொழிந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து மூத்த தலைவர்களுக்கும் நன்றி என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத் பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டார் என மம்தா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மற்றும் பாரூக் அப்துல்லா மறுத்துவிட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.