#Breaking:விவசாயிகளின் கடன், மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!
விவசாயிகளின் கடன்,மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தொடக்கத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து,நிதித்துறை பொறுப்பில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் 2021-2022-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்படி,ரூ.9,924 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து,விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும்,விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.அதுமட்டுமல்லாமல்,மூடப்படுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக,கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், உயர்கல்வித்துறைக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில்,ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் எனவும்,புதுச்சேரி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து,செப்டம்பர் 3-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தமிழிசையின் பட்ஜெட் உரைக்கு சட்டப்பேரவையில் நாளை நன்றி தெரிவிக்கப்பட உள்ளது.