BREAKING: ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் – ஐ.சி.எம்.ஆர்.!
அடுத்த 2 நாள்களுக்கு ரேபிட் கிட்டில் மாநில அரசுகள் பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று என்பது வேகமாக பரவி வருகிறது. இதனால், 18601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், கொரோனாவை கண்டறிய பயன்படுத்தப்படும் ரேபிட் கிட்களை மத்திய அரசு, சீனாவிடம் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட கருவிகளை வாங்கியது. பின்னர் வாங்கிய கருவிகளை மத்திய அரசு மாநிலம் வாரியாக பிரித்து கொடுத்தது.
அதில், தமிழகத்திற்கு 12,000 , குஜராத்திற்கு 24,000 , ராஜஸ்தானிற்கு 10,000 என கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தானில் இன்று விரைவான சோதனைக் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யும் போது தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையெடுத்து குஜராத்திலும் ரேபிட் கிட்டில் எடுக்கப்படும் பரிசோதனைகள் 6% முதல் 70% வரை மாறுபட்ட முடிவுகளாக வருவதாக குற்றச்சாட்டிய நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு ரேபிட் கிட்டில் மாநில அரசுகள் பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் ரேபிட் கிட்களை ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.