#BREAKING: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது மத்திய அரசு. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு மொத்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும். அதிகபட்ச வரம்பாக ரூ.17,951 ஆகவும் இருக்கும் என்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், உலகம் முழுவதும் எல்பிஜி விலை அதிகரித்து வருகிறது. சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இழப்பை ஈடுகட்ட, ஒரே நேரத்தில் ₹22,000 கோடியை மத்திய அரசு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜியை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன. ஜூன் 2020-ஜூன் 2022 க்கு இடையில், சர்வதேச எல்பிஜி விலை சுமார் 300% உயர்ந்துள்ளது. 2022-23 முதல் 2025-26 வரையிலான 15வது நிதிக்குழுவின் மீதமுள்ள 4 ஆண்டுகளுக்கு வடகிழக்கு பிராந்தியத்திற்கான (PM-DevINE) புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002ஐ திருத்த முற்படும் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 97வது அரசியலமைப்பு திருத்தத்தின் விதிகளை உள்ளடக்கும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.