#BREAKING: டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடக்கம்! முதற்கட்டமாக 4 நகரம், 4 வங்கி!
மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் துவங்கியது.
2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை வருகிற இன்று அறிமுகம் செய்யப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக வெளியிடப்படும். சோதனை அடிப்படையில் 8 வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முதல் கட்டமாக 4 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சில்லறை வணிகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் இந்தியாவில் தொடங்கியது. மொபைல் செயலி மூலம் இ – வாலட் உருவாக்கி டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தலாம் என்றும் டிஜிட்டல் ரூபாயை டோக்கன் வடிவில் பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட வணிக நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
இதுபோன்று முதற்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி ஆகிய நான்கு வாங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். அதன்படி, மின்னணு வடிவில் ரூபாயை பயன்படுத்தி கொள்ளும் நடைமுறை தொடங்கியது. இந்த அறிவிப்பின் மூலம் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்தில் வந்துள்ளது.