தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!
காவிரி நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக முடிவுகள் எடுக்க காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதில் காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாடு, கர்நாடகா , கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில நீர்வளத்துறை நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கும்.
அதன்படி, காவிரி நதியின் நீர்மட்டம் மற்றும் மழையின் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்து, எந்த அளவிற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை வெளியிடும். இந்த பரிந்துரைகளை குறிப்பிட்ட மாநில அரசு ஏற்கவில்லை என்றால், காவிரி மேலாண்மை வாரியம் அந்த மாநில அரசுடன் ஆலோசனை நடத்தி உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.
இந்த உத்தரவுகளை மாநில அரசு பின்பற்ற வேண்டும். அதன்படி, கடந்த அக்டோபர் 13ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தண்ணீரை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரையில் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை கனாக திறந்து விடவில்லை.
இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில், இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உட்பட தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி நீர்வளத்துறை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு, கர்நாடக நீர் நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரம் ஆகியவற்றைப் பற்றி ஆலோசனை நடைபெற்ற நிலையில், தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.