#BREAKING: வேளாண் சட்டங்களுக்கு தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா..? என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறிருந்தது. விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்றும் கூறிய நிலையில், தற்போது வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரதீய கிசான் சங்க தலைவர் ஜித்தேந்தர் சிங் மன், சர்வதேச கொள்கைகள் குழு தலைவர் பிரமோத் குமார் ஜோஷியும், அசோக் குலாட்டி மற்றும் அனில் தன்வத் ஆகியோர் 4 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் விவசாயிகள் 48 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.