#BREAKING: பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங்!
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அமரிந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆளுநரிடம் பதவி விலகல் கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சி தலைமையால் மூன்றாவது முறையாக அவமானப்படுத்தப்பட்டுள்ளேன் என்றும் காங்கிரஸ் தலைமை யாரை நம்புகிறதோ, அவரையே தேர்வு செய்து கொள்ளட்டும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, சமீப காலமாக உட்கட்சி பூசல் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்றது முதல் அமரிந்தர் சிங்க்கு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்க முடியாது என்று தொடர்ந்து அமரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவை தலைவராக ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆதரவளித்தனர்.
இதன்பின் சித்து மாநில காங்கிரஸ் தலைவரானது முதல் அமரிந்தர் சிங், காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். பஞ்சாபில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமரிந்தர் சிங் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்தார்