#BREAKING: 5 மாநில தேர்தல் – ஆன்லைனில் வேட்புமனு.. வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு!
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைப்பெறும் என தெரிவித்ததை தொடர்ந்து, 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பொதுத்தேர்தல் 7 கட்டங்களாகநடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்திலேயே அமைக்கப்படும். கொரோனா காரணமாக ஆன்லைனிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும்.
வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம். வேட்பாளரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மாநில தேர்தலில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் பங்கேற்பர். அவர்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள் என்றும் கூறியுள்ளார். இதில் 24.98 லட்சம் பேர் முதல் முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 10ம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்.10ம் தேதி தேர்தல் நடைபெறும். 5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.