பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் தோல்வி! இலக்குத் தவறி கடலில் விழுந்தது..!
450 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் தோல்வி அடைந்துள்ளது. அதனது இலக்கை தவறி கடலில் விழுந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது. அப்போது அதன் இலக்கை எட்டாமல் ஏவுகணை செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்துள்ளது.
இந்த ஏவுகணை 450 கி.மீ இலக்கை தாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் தோல்வி குறித்த காரணம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஏவுகணைகளில் ஒன்றான இந்த பிரம்மோஸ் ஏவுகணை 300 கி.மீ இலக்கு வரை ஏவப்பட்டு வெற்றியும் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணைக்கு இந்தியாவில் உள்ள பிரம்மபுத்ரா நதி மற்றும் ரஷ்யாவில் உள்ள மோஸ்க்வா நதி ஆகிய இரண்டு நதிகளின் பெயர்களையும் இணைத்து பிரம்மோஸ் என்று பெயரிட்டுள்ளனர்.