எல்லைப் பிரச்சினை..எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என உத்தரவாதம் கொடுக்க முடியாது.. ராஜ்நாத் சிங்.!
எல்லைப் பிரச்சினையை எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ஆகியோர் சென்றனர். இதைத்தொடர்ந்து, ஸ்டக்னா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய சாகச நிகழ்ச்சிகள் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே என்ன நடந்தது, எல்லையில் பாதுகாத்த சிலர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களை இழந்ததால் வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், அதை எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எங்கள் நிலத்தின் ஒரு அங்குலம் கூட உலகின் எந்த சக்தியினாலும் எடுக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிந்தால், இதைவிட சிறந்தது எதுவுமில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.