2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்..!
இந்தியாவில் கொரோனா தாக்கம் ஏறுமுகமாக இருந்து வரும் இந்த சமயத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 4,454 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அதன் காரணத்தால் பலரும் தங்களால் இயன்ற பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் பலர் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனா தடுப்பு பணிக்கு உதவி வருகிறது.
இப்போது பிசிசிஐ மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 லிட்டர் ஆக்சிஜன் சேமிக்கும் திறன் கொண்ட 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய அரசிற்கு வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.