கிசான் திட்டம்: வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.2000.. இவர்களுக்கு மட்டும் கிடையாது.!
கிசான் சம்மன் நிதி யோஜனா : நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசின் ‘பிரதமர் கிசான்’ திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.6,000 பணத்தை 3 தவணைகளாக (ரூ.2,000 வீதம்) வழங்கி வருகிறது.
இது வரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 17வது தவணை தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதன்படி, நாளை மறுநாள் (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 17-வது தவணை மூலம், நாடு முழுவதும் உள்ள சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட உள்ளது. 2 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கிசான் திட்டத்தில் உடல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு கிடையாது?
இந்நிலையில், eKYC பூர்த்தி செய்யாதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. pmkisan.gov.in இணையதளத்தின் மூலமாகவோ, அருகிலுள்ள டிஜிட்டல் சேவா போர்டல் (csc) செண்டர் மூலமாகவோ eKYC பூர்த்தி செய்யலாம்.
eKYC ஆன்லைனில் பெறுவது எப்படி?
- https://pmkisan.gov.in/ இணையதளத்தை பார்வையிடவும்.
- ‘விவசாயிகள் கார்னர்’ என்பதன் கீழ், e-KYC விருப்பத்தைப் பார்த்து, அதனை கிளிக் செய்யவும்.
- இப்பொது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் உங்கள் ஆதார் விவரங்களை கொடுக்கவும்.
- சரிபார்ப்பிற்காக மொபைல் போனுக்கு OTP அனுப்பப்படும்.
- அந்த OTP-ஐ கொடுத்தால் போதும், e-KYC செயல்முறை முடிவடையும்.