துணை ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்ட ‘ப்ளூ டிக்’!
- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது
- ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், மீண்டும் டுவிட்டரில் ப்ளூ டிக் சேர்க்கப்பட்டது.
பிரபலமான சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் கணக்கு வைத்திருக்க கூடிய முக்கியமான அரசியல் தலைவர்கள், திரையுலகம் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு அவர்களது கணக்கு இது தான் என உறுதிப்படுத்துவதற்கான அடையாளமாக ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கி இருந்தது.
கடந்த ஆறு மாத காலங்களாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது தனிப்பட்ட கணக்கை உபயோகிக்காதது தான் இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி இருந்தாலும், ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கான முறையான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது மீண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் டுவிட்டர் கணக்கில் ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் வழங்கியுள்ளது.