கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 3 பேருக்கு “ப்ளூ கார்னர்” நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை!
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 பேருக்கு “ப்ளூ கார்னர்” நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போலுக்கு என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை பெங்களூரில் கைது செய்து, கொச்சியில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்பொழுது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை என்.ஐ.ஏ நீதிமன்றம் நிராகரித்து, ஸ்வப்னா சுரேஷூக்கான ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராபின்சன், சித்திக் அக்பர், அகமது குட்டிக்கு ஆகியோருக்கு “ப்ளூ கார்னர்” நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போலுக்கு என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது.
அது என்ன ப்ளூ கார்னர் நோட்டிஸ்?
ப்ளூ கார்னர் நோட்டிஸ் என்பது சர்வதேச காவல்துறையினரால் அனுப்பப்படும் விசாரணை நோட்டீஸாகும். இந்த நோட்டீஸ், கிரிமினல் குற்றம் செய்து தலைமறைவாகிருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது, அடையாளம் காண்பதற்கும், அவர்களை பற்றி புகாரளித்த நாடுகளிடையே பகிர்ந்து கொள்வதற்கு அனுப்பப்படும் நோட்டீஸாகும்.
இந்த நோட்டீஸ், ஆள்கடத்தல், பலாத்காரம், உள்ளிட்ட பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சாமியார் நித்தியானந்தாவுக்கு இன்டர்போல் வெளியிட்டுள்ளது.