நேற்று காலை குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரான வாட் நகரில் தொல்லியல் துறை நடத்திக்கொண்டிருக்கிற அகழாய்வுப்பணியை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
”வாட்நகரின் பழைய பெயர் ஆனந்தபூர். இங்கு அகழாய்வு செய்யவேண்டும் என்று நான் கூறினேன். அதனை மத்தியத் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர். இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெரியநகரம் இருந்திருக்கிறது. அது அழிந்துவிடாமல் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நகருக்கு சீனாவில் இருந்து யுவான்சுவாங் வந்துள்ளார். பெருமைகொண்ட இந்நகரைக் கண்டறிந்ததற்காக தொல்லியல் துறைக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.
வாட் நகர் போலவே 2014 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்ட இடம் கீழடி. முதன்முறையாக சங்ககால நகரம் ஒன்று இங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்கட்டிட அமைப்புகளும் தொழிற்கூடங்களும் விரிந்த அளவில் கிடைத்துள்ளன. பல பிராமி எழுத்துக்களும் எண்ணிலடங்காத தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.
நேற்று காலை பிரதமரால் பாராட்டப்பட்ட அதே தொல்லியல் துறை இன்று கீழடி அகழாய்வுக்குழியில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறது. ஆய்வாளர்களின் கூடாரங்கள் எல்லாம் பிரித்தெடுக்கப்பட்டுவிட்டன. கீழடியின் கதை முடிவுக்குவருகிறது.
தனது சொந்த ஊரில் சிறப்பாக ஆய்வு நடத்தியதற்காக மத்திய தொல்லியல் துறையை பிரதமர் பாராட்டலாம். ஆனால் கீழடி அகழாய்வினை எல்லாவகையிலும் சீர்குலைத்து இறுதியாக மூடுவிழாவை நடத்தியுள்ள மத்திய தொல்லியல் துறையை நாம் என்ன செய்யலாம்?
தொலைகாட்சி ஒன்றில் நான் இப்படி பேசியதை கேட்ட நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து, “பிரதமரின் மனதுக்கு நெருக்கமான ஒரு துறை இருப்பதிநாண்கு மணி நேரத்தில் இரண்டுமுறை பாராட்டைப் பெறுவது சட்டப்படி குற்றமா?” எனக் கேட்டார்.
வாட் நகருக்கு யுவான்சுவாங் வந்ததையெல்லாம் தெரிந்துவைத்துள்ள பிரதமருக்கு சட்டம் தெரியாமலா இருக்கும்?
-வேள்பாரி வெங்கடேசன்.
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்.