விஜய் மல்லையா,அமிதாப்பச்சன் வெளிநாட்டு முதலீடு :ஆய்வு முடிவில் அதிர்ச்சி …
வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு அதிக அளவில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகில் உள்ள 96 செய்தி நிறுவனங்களும் இணைந்து நடத்திய புலனாய்வில் வெளிநாடுகளில் உள்ள வரிச் சலுகையை பயன்படுத்தி உலகச் செல்வந்தர்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பாரடைஸ் பேப்பர்ஸ் என்னும் தகவலின்படி இந்தியாவில் உள்ள பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் இந்த புலனாய்வில் அம்பலம் ஆகியுள்ளது. பாரடைஸ் பேப்பர்ஸ் என்பது 1,34,00,000 ஆவணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆகும். அதன்படி வெளியான 180 நாடுகள் பட்டியலில் இந்தியா 19ம் இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 714 இந்தியர்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியர்களில் அமிதாப் பச்சன், விஜய் மல்லையா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜயந்த் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், கார்த்தி சிதம்பரம், சச்சின் பைலட் ஆகிய அரசியல்வாதிகளின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தவிர பிரபல பாலிவுட் நடிகரும் சர்ச்சைக்குரியவருமான சஞ்சய் தத்தின் மனைவி மன்யாதா தத், ஊழல் வழக்கில் இடைத்தரகரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் நீரா ராடியா ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இந்த தகவல்களை பாரடைஸ் பேப்பர்ஸின் இந்தியப் பங்காளரான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அளித்த தகவலின் படி இதில் பல இந்திய முன்னணி நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜிந்தால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹாவெல்ஸ், ஹிந்துஜாஸ், எம்ஆர்எஃப், வீடியோகோன், ஹிரானந்தானி குழுமம், மற்றும் டி எஸ் கன்ஸ்டிரன்கஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன என்று கூறப்படுகிறது.