இந்தியாவின் தென்மாநிலங்களில் இருந்து சீனாவை அழிக்கும் ஏவுகணை தயாரிப்பு..,
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘ஆப்டர் மிட்நைட்’ என்ற டிஜிட்டல் பத்திரிகையில், ‘2017ல் இந்தியாவின் அணு ஆயுத முயற்சிகள்’ என்ற பெயரில், அமெரிக்காவின் பிரபல அணு ஆயுத நிபுணர்கள் ஹான்ஸ் கிரிஸ்டென்சென், ராபர்ட் நோரிஸ் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் அபாயம் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்காக, இந்தியா தயாராகி வந்தது. அதே நேரத்தில், மற்றொரு அண்டை நாடான, சீனாவிடம் இருந்தும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் வந்தால், அதை சமாளிப்பதற்கான அணு ஆயுதத் தயாரிப்பிலும், ஏற்கனவே உள்ள ஆயுதங்களை மேம்படுத்தும் திட்டங்களிலும் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.அணு ஆயுதத்துக்கு தேவையான, 600 கிலோ புளோட்டோனியத்தை, இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம், 150 முதல், 200 அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும். தற்போது வரை, 130 ஆயுதங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, தற்போது, ஏழு வகையான அணு ஆயத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. விமானங்களில் இருந்து வீசக் கூடிய இரண்டு ஏவுகணைகளும், தரையில் இருந்து தாக்கக் கூடிய, நான்கு ஏவுகணைகளும், கடலில் இருந்து தாக்கக் கூடிய ஒரு ஏவுகணை தயாரிப்பிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, மேலும் நான்கு ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன.அக்னி -1 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகமான, அக்னி -2 ஏவுகணை, 2,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. இதன் மூலம், சீனாவின் மேற்கு, மத்திய மற்றும் தென் பகுதிகளை இந்தியா தாக்க முடியும். அக்னி – 4 ஏவுகணை, பீஜிங், ஷாங்காய் உட்பட, சீனாவின் பெரும்பாலான பகுதிகளை தாக்கும் வலிமை உடையது.அடுத்ததாக, 5,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய, அக்னி – 5 ஏவுகணை தயாரிக்க, இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் தென்மாநிலங்களில் இருந்தும், சீனாவின் அனைத்து பகுதிகளையும் தாக்க முடியும்.