கேரளாவில் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் இளைஞர்கள் பற்றிய விபரம் வெளியிடு !
உலகையே உலுக்கி வரும் ஒரு சர்வதேச தீவிரவாத இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்.
இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே உலக நாடுகளை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அடிமைபடுத்துவதே முக்கிய குறிக்கோள் .இந்தியாவிலும் இவர்கள் மூளை சலவை செய்து தங்களது இயக்கத்தில் சேர்பதே முக்கிய நோக்கம் ஆகும்.இந்நிலையில் ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக முக்கிய நபர் ஒருவர் உட்பட 5 பேரை கேரள போலீசார் கடந்த வாரம் கைது செய்ததைத் தொடர்ந்து தற்போது சிரியாவில் தீவிரவாதக் குழுவினரிடம் இணைந்து சண்டையிட்டு வரும் 5 கேரள இளைஞர்களின் விவரங்களை தற்போது கேரள காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் என்று கருதப்படும் ஹம்சா (Hamza) என்ற ஹம்சா தாலிபான், (வயது 52) என்பவரை கடந்த வாரம் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் விசாரித்ததன் அடிப்படையில் வெளிநாடுகளில் தங்கி பணிபுரியும் கேரள இளைஞர்களை மூளை சலவை செய்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஐ.எஸ் இயக்கத்தில் சேர்த்துவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தற்போது சிரியா, ஏமன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 பேர் இறந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வந்த வடக்கு கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கடந்த 2 ஆண்டுகளில் திடீரென மாயமாகியுள்ளனர். இவர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக தகவல்கள் கசிந்தன.
தற்போது இவர்களில் 5 பேர் குறித்த தகவல்களை ஹம்சா தாலிபானிடம் விசாரித்ததன் அடிப்படையில் கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.
தேச்சிகுளத்தை சேர்ந்த அப்துல் கையூம், பாப்பினசேரியைச் சேர்ந்த சப்பான் மற்றும் கன்னூர் மாவட்டம் வல்லபட்டிணத்தைச் சேர்ந்த அப்துல் மனப் , முகமத் ஷபீர் , சுஹைல் ஆகியோர் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து சண்டையிட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் இவர்கள் எவ்வாறு சிரியா சென்றடைந்தனர் என்பது குறித்து தகவல் இல்லை என்று கன்னூர் உதவி காவல் ஆணையர் சதானந்தம் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடுகளில் பணிபுரிந்து வந்த 100 முதல் 150 கேரள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருக்கலாம் என்றும் கேரளா காவல்துறை சந்தேகம் தெரிவிக்கிறது.
ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்க்க சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நிதியுதவி அளித்ததாக ஹம்சா காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரிந்துவருவோர் குறித்து கண்காணிக்க வரைமுறை இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் மட்டும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஏறத்தாழ 18 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.