கேரள அரசு “ஜிகாதி தீவிரவாத” சூழலை ஊக்குவிக்கிறது” ஆதித்யநாத் பகிரங்க குற்றச்சாட்டு…!
கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஜிகாதி தீவிரவாத சூழலை ஊக்குவிக்கிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து அங்கு “மக்கள் யாத்திரை”(ஜன் ரக் ஷ யாத்திரா) என்ற பெயரில் 15 நாட்கள் பிரசார யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது.
இந்த யாத்திரை முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.ஆனால் அவரை கண்டித்தும் கேரளா இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் கொலைகாரன் வருகிறான் என்று கூறி ட்விட்டரில் டிரென்ட் செய்தார்கள். மேலும் அவரும் பேரணியை ரோம்ப நேரம் நடத்தாமல் பாதியிலே விட்டுவிட்டு அவசர வேலையிருப்பதாக கூறி டெல்லி புறப்பட்டார். இதனால் பேரணி பாதியிலே கைவிடப்பட்டது.இந்நிலையில், யாத்திரையின் இரண்டாவது நாளான நேற்று உத்தரப்பிரதேசம் மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். சாலையில் யாத்திரை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத்திற்கு போலீசார் மிகுந்த பாதுகாப்பு அளித்தனர்.
இந்த யாத்திரையில் மலையாள நடிகர் மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுரேஷ் கோபி, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா மற்றும் 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 15 கி.மீ. தொலைவு நடைபெறும் இந்த யாத்திரையானது கீச்சேரியில் தொடங்கி கண்ணூர் நகரில் முடிந்தது.
யாத்திரையின் போது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அவர் கூறியதாவது-
இந்த யாத்திரை கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் ஆளும் அரசுகளைக் காட்டும் கண்ணாடியாக இ ருக்கும். இந்த அரசுகள் ஜனநாயகத்தைப் பற்றி பேசிவிட்டு, உண்மையில் வன்முறையில் நம்பிக்கை கொண்டவை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. இந்த யாத்திரையில் கம்யூனிஸ்ட் அரசுகளின் பிம்பத்தை காட்டும் கண்ணாடியாக பா.ஜனதா இருக்கும். அவர்கள் செய்த மோசமான செயல்களை எடுத்துக்கூறுவோம்.
கேரள மாநிலத்தில் அரசியல் கொலைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜனதா கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் இலக்காக வைத்து தாக்கப்படுகிறார்கள். அதன் காரணமாக விழிப்புணர்வு நடத்தவே இந்த பிரசாரமாகும். நாங்கள் எடுக்கும் இந்த முயற்சியின் மூலம்,கேரளா, மேற்குவங்காளம், திரிபுரா அரசுகள் வன்முறையை நிறுத்திவிட்டு தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும். அப்பாவி மக்களை கொன்று குவிப்பது நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.