தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கிறதா…? கேரளா மருத்துவமனைகள்
தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க கேரளா மருத்துவமனைகள் மறுக்கின்றன.
கேரள மருத்துவமனைகளில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. கடந்த மாதம் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் (30) என்பவர் கேரளாவில் கொல்லம் அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.
அவருக்கு கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. சிகிச்சை கிடைக்காததால் அவர் உயிர் இழந்தார்.இந்த சம்பவத்திற்காக கேரளா இடது முன்னணி அரசின் முதல்வர் பகிரங்க மன்னிப்பும் தமிழர்களிடம் கேட்டார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களிடம் மன்னிப்பும் கேட்டு நிதியுதவியும் அளித்தார்.இந்த செயலில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அன்றைக்கே நடவடிக்கை எடுத்தார். இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு அந்த குழு அறிக்கை கேரள அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதே போல் ஒரு சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது.
மலப்புரம் அருகே, தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தமிழகத்தை சேர்ந்த மற்றொரு நபரால் கடுமையாக தாக்கப்பட்டார். அவரது காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜேந்திரன் முதலில் திரிச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டுள்ளது. உடன் அவரை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கேயும் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேந்திரன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி தொடர்ந்து தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன கேரளா மருத்துவமனைகள் என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது.