திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்குவதற்கு ஆதார் கட்டாயம்
உலகிலேயே பணக்காரக் கடவுள் என்று வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடுவதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பதி செல்வோருக்கு வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதால் விடுமுறைக் காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் என்ற சிறப்பை பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவோருக்கு புதிய திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்ல் திருமலையில் 6200 அறைகள் உள்ளன. இதில் 3000 அறைகள் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்படுகின்றன. எஞ்சிய அறைகளில் முக்கிய பிரமுகர்ளுக்கான ஒதுக்கீடு போக ரூ. 50 முதல் ரூ.1000 வரையில் அறைகள் பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகம் மற்றும் எம்பிசி ஆகிய இடங்களில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று முதல் காலை 6 மணி மற்றும் மதியம் 2 மணி என இரு வேலை நேரங்களில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் வரிசை எண் அடிப்படையில், காலியாகும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் அறைகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அறைகள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் ஆத்திரமடைந்தவர்கள் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.