கேரளாவுக்கு வந்து மருத்துவமனைகளை திறம்பட நடத்துவது குறித்து யோகி படிக்கட்டும்: மார்க்சிஸ்ட் கட்சி சவால்
கேரளா மாநிலத்தில் மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பா.ஜ.க முடிவு செய்தது. இந்த யாத்திரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து இன்று தொடங்கியது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பையனூர் வந்த அவர், அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பையனூரில் நடந்த விழாவில் பேசினார்.
அதன்பிறகு மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் முன்னிலையில் மக்கள் யாத்திரையை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கேரளா மாநிலம் முழுவதும் 15 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் மத்திய மந்திரிகள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை கேரளா வந்து இந்த யாத்திரையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, யோகி கண்டிப்பாக கேரளாவுக்கு வந்து மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதை பார்த்து படிக்க வேண்டும் என கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளது.