மோடி அரசு தனது தவறான பொருளாதார கொள்கைகளை மாற்ற வேண்டும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

Default Image

பிரதமர் மோடி அரசு தனது தவறான பொருளாதார கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவை சேர்ந்தவர்களே மத்திய மோடி அரசின் பொருளாதார கொள்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்தித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியுள்ளதால் நாட்டில் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
தற்போது ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. நமது நாட்டின் பொருளாதாரம் சீரடைய இன்னும் 3 ஆண்டுகள் ஆகும்.

மத்திய அரசு தனது தவறான பொருளாதார கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் பெரும்பாலான மாநிலங்கள் பாதிக்கப்படும்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. நகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து செயல்படுகின்றன. தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
தொடர்ந்து டெங்கு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலத்தில் 98 சதவீத வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்டியால் வருவாய் குறைந்து புதுவை மாநிலத்துக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்து பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. புதுவைக்கு ஏற்பட்டுள்ள இழப்பை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எடுக்கப்பட்ட மத்திய அரசின் பொருளாதார கொள்கை விளைவின் பாதிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
பணமதிப்பிழப்பு திட்டம் முழு தோல்வியாகும். நமது பொருளாதாரம் 5.7 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

3 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் கூட உருவாக்கவில்லை.
இறக்குமதி பெருகி பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தன் தவறான கொள்கை சீர்திருத்தி மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்படும். தற்போது 3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
சர்வேதச அளவில் கச்சா எண்ணெய் விலை 3 பங்கு குறைந்தும் கூட பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் உள்ளனர் . சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்த்னை சந்தித்து கடற்கரை பாதுகாப்பு திட்டத்தின் பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு கோரியுள்ளேன்.

மேலும் இரண்டாவது திட்டமாக தெற்கு பகுதியில் புனரமைப்பு பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூர்த்திகுப்பம் – காலாப்பட்டு வரை கடல் அரிப்பை தடுக்க ரூ.356 கோடி திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. அதிகாரிகளின் குற்றங்களை விசாரிக்க விசாரணை அதிகாரியாக தலைமைச் செயலர் பொறுப்பேற்றுள்ளார். மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு சொகுசு படகுகள் வாங்கியதில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 2-வது தடவை உரிய வகையில் ஒப்பந்தம் கோரியுள்ளனர். இது முந்தைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது. நிர்வாகத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் எல்லையை மறந்து புகார் செய்வோராக உள்ளனர்.

இது வேடிக்கையாக உள்ளது என்றார் நாராயணசாமி. எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணசாமி உடனிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்