சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி என்ற குற்றச்சாட்டு அபத்தமானது.. கொந்தளிக்கும் நாஞ்சில் சம்பத்!
பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தனக்கு சிறப்பு வசதிகள் செய்து தருவதை சசிகலா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக டிஜிபி சத்தியநாராயணா, சசிகலா குரூப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக டிஐஜி ரூபா கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அபத்தமானது, அடிப்படை ஆதாரமற்றது என அவர் கூறியுள்ளார்
சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை அழுக்காக்க முயற்சி நடப்பதாக நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதை சசிகலா ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார், அதற்கெல்லாம் சசிகலா இதற்கு இடம் கொடுக்க மாட்டார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக கூறச்சொல்லி டிஐஜி ரூபாவை யாரோ தூண்டிவிட்டுள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டினார்.