இளைஞர்களின் நாயகன் அப்துல் கலாமின் நினைவு அருங்காட்சியகம் இன்று கேரளாவில் திறப்பு
திருவனந்தபுரம்: முன்னாள் குடியரசுத்தலைவரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான மறைந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கலாமின் கோட்பாடுகளை பிரபலப்படுத்தும் அமைப்பான டாக்டர் கலாம் ஸ்மிருதி இண்டர்நேஷனல் மூலம் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு, டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம், என பெயரிடப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே எதிர்காலத்தை பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திய கலாமின் மிகவும் அரிதான புகைப்படங்கள், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மாதிரி வடிவங்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் கூறிய எழுச்சியூட்டும் வாசகங்கள் போன்றவை அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார். மேலும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் கே.சிவன் மற்றும் கேரளா சட்ட சபையின் துணை சபாநாயகர் வி.சசி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.