இரவு பகலாக தடுப்புகள் அமைப்பு… டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம்!
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 விவசாய சங்கத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்பாகவே விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று டெல்லியை நோக்கி ‘சலோ டெல்லி’ பேரணியை விவசாயிகள் தொடங்கினர்.
கடந்த 2020ல் நடைபெற்ற மிகப்பெரிய தொடர் போராட்டம் போன்று இம்முறை மாறிவிட கூடாது என்பதால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க முன்பு இல்லாத அளவுக்கு மத்திய அரசு 144 தடை உத்தரவு என பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லை மற்றும் டெல்லிக்கு நுழையும் சாலைகளில் கான்கிரீட் தடுப்பு அமைத்தல், இரும்புவேலிகள், முள்வேலி தடுப்புகள் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக படையெடுத்து வருகின்றனர். நேற்று டெல்லி – அம்பாலா எல்லையில் சாம்பு என்ற இடத்தில் விவசாயிகள் பேரணியாக வருவதால், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதனால் உச்சகட்ட பதற்றம் நிலவியது.
துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு
அதுமட்டுமில்லாமல், விவசாயிகள் பேரணியால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் நாளை வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேரணியின் 2வது நாளான இன்று, தலைநகர் டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் நாளான நேற்று விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால், இன்று டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக இரவு பகலாக சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளை சிமெண்ட் மூலம் இணைத்து தடுப்பு சுவர் அமைத்தல், ஆணிகள் பதிப்பு மற்றும் கம்பி வேலிகள் அமைத்தல் பணிகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. விவசாயிகள் தலைநகரை முற்றுகையிடுவதை தடுக்க துணை ராணுவம், காவல்துறை எல்லைகளில் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இதனை பொருட்படுத்தாமல் டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.