ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை ? விழிப்புடன் இருக்க மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள்
ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனிடையே கொரோனாவிற்கான மருந்து தயாரிப்பது தொடர்பாக உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதனிடையே இந்தியாவில் ஒரு மருந்து சந்தைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தேவை.எனவே மிக அவசர தேவைக்காக கொரோனா நோய்க்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.அதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அர சு அனுமதி வழங்கியது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனத்தால் இந்த ரெம்டெசிவிர் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பரவி உள்ள அமெரிக்காவிலும் ரெம்டெசிவிர் மருந்து அவசர தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ரெம்டெசிவிரை தயாரிக்க 6 மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அதில், 5 நிறுவனங்கள் கிலீட் சைன்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.ரெம்டெசிவிர் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். கர்ப்பிணிகள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தாய்மார்கள் ஆகியோருக்கு இந்த மருந்து ஏற்றது இல்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் வென்டிலேட்டர் இல்லாமல் சாதாரண ஆக்ஸிஜன் பெற்று வருபர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே கொரோனாவுக்கு மருந்தாகக் கருதப்படும் ரெம்டிசிவர், உள்ளிட்ட மருந்துகள் கறுப்பு சந்தைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது என்ற புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் ,ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிப்லா, ஹெட்ரோ மற்றும் மைலானுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம்.