கருப்பு பூஞ்சை தொற்று: மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலி!
கருப்பு பூஞ்சை பாதிப்பால் மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 729 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக தற்பொழுது கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. கருப்பு பூஞ்சையால் நாடு முழுதும் இதுவரை பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனராம்.
இதுகுறித்து இன்று அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மகாராஷ்டிராவில் 7,998 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 729 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது 4392 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் நாக்பூர் மாவட்டத்தில் தான் 104 பேர் கருப்பு பூஞ்சையால் உயிரிழந்து உள்ளனராம். மேலும், புனேவில் 90 பேரும், ஒளரங்காபாத்தில் 75 பேரும் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.