பாஜகவின் கொரோனா தடுப்பூசி இலவசம் வாக்குறுதி.! தேர்தல் ஆணையத்தில் புகார்
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. இதனிடையே பா.ஜ.க தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் விவாதமாக மாறியுள்ளது.எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்திவிட்ட பதிவில்,கொரோனாவை எப்படி அணுகுவது என்ற உத்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள். கொரோனா தடுப்பூசிகளை பதுக்கும் வகையில், தவறான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சாகத் கோகலே (Saket Gokhale) என்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், மத்திய அரசு பீகார் தேர்தல் விஷயத்தில் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தடுப்பூசி இலவச அறிவிப்பானது பாரபட்சமானது. இது தொடர்பான அறிவிப்பை எந்த பாஜக தலைவரும் வெளியிடவில்லை. ஆனால், இந்த அறிவிப்பை இந்தியாவின் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார் என்பதை தேர்தல் ஆணையம் அறிய வேண்டும். எனவே தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.