ராஜஸ்தான் அரசை கலைக்க சதி செய்வது தெளிவாக தெரிகிறது -ராகுல் காந்தி
ராஜஸ்தான் அரசை கலைக்க சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகமிட்டார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார்.
இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கூறியது.
இதனைதொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், கொரோனா காரணமாக சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் மறுப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர். இதையடுத்து, நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் .அங்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் காத்திருந்தனர். அப்போது, சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர். இந்த சமயத்தில் ஆளுநரை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
வருகின்ற திங்கள்கிழமை முதல் ஒரு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி தங்கள் பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2 வாரங்களாக அதிருப்தி எம்எல்ஏக்களால், ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மூன்றாவது முறையாக முதல்வர் அசோக் கெலாட் ஆளுநரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்தியா அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் ஆளப்படுகிறது .தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களால் வழி நடத்தப்படுகின்றன. ராஜஸ்தான் அரசை கலைக்க சதி செய்வது தெளிவாக தெரிகிறது. இது ராஜஸ்தானின் 8 கோடி மக்களை அவமதிப்பதாகும் .ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே நாட்டு மக்கள் மத்தியில் உண்மை வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார்.
देश में संविधान और क़ानून का शासन है।
सरकारें जनता के बहुमत से बनती व चलती हैं।
राजस्थान सरकार गिराने का भाजपाई षड्यंत्र साफ़ है। ये राजस्थान के आठ करोड़ लोगों का अपमान है।
राज्यपाल महोदय को विधान सभा सत्र बुलाना चाहिए ताकि सच्चाई देश के सामने आए।#ArrogantBJP
— Rahul Gandhi (@RahulGandhi) July 24, 2020