யார் முன்னிலை.? பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி.! இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..
இடைத்தேர்தல் முடிவுகள் : ஹிமாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகிறது.
7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிமுதல் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தில், டெஹ்ரா தொகுதியில் எண்ணப்பட்டு முடிந்த 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் ஹோஷ்யர் சிங் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரும், இமாச்சல பிரதேச முதல்வருமான சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் தற்போது சிறிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
அதே போல இமாச்சல பிரதேசத்தில் ஹமிர்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஒன்பது சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா முன்னிலை வகிக்கிறார் என்றும் அடுத்த இடத்தில் பாஜகவின் ஆஷிஷ் சர்மா சற்று பின்தங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சுரீந்தர் கவுர் 3000 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.