பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது.. சில மாதங்கள் தான்..! திருமாவளவன் பரபரப்பு பேட்டி.!
டெல்லி: மக்களவைத்தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 8) பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். NDA கூட்டணியில் நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்ன்றனர்.
இந்த இரு தலைவர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கூறி வந்தனர். விசிக தலைவர் திருமாவளவனும் முன்னர் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்து இருந்தார்.
தற்போது அமைய உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி பற்றி VCK தலைவர் திருமாவளவன் ANI செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று, மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில், I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் சந்தித்து, தற்போதைய கள நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தோம்.
தற்போது பாஜகவால் அமைக்கப்பட்டுள்ள அரசு 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை வழங்காது. ஓரிரு மாதங்களிலேயே கூட்டணியில் சிக்கல் ஏற்படும். சரியான நேரத்தில், நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என திருமாவளவன் பேசியிருந்தார்.