“புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக பாஜக தொடர்ந்து உழைக்கும்” – பிரதமர் மோடி..!
புதுச்சேரி எம்பியாக செல்வகணபதி அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.கோகுலகிருஷ்ணன் அவர்களின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனால்,புதிய எம்.பி.யைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் 4-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி,இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப். 15-ம் தேதி தொடங்கி கடந்த 22-ம் தேதி முடிவடைந்தது. மாநிலத்தின் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையில் எம்.பி. பதவியைப் பெறுவதில் கடும் போட்டி நிலவியது.
இதனையடுத்து,பாஜக தலைமை நேரடியாக முதல்வர் ரங்கசாமியிடம் பேசியதைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக பாஜக மாநிலப் பொருளாளர் செல்வகணபதியை அதிகாரபூர்வமாகக் கட்சி மேலிடம் அறிவித்தது. இதனால்,செல்வகணபதி அவர்கள் கடைசி நாளான கடந்த 22-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுக்கள் கடந்த 23-ம் தேதி அன்று பரிசீலனை செய்யப்பட்டன.வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். ஆனால்,அரசியல் கட்சியினர் யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் புதுவை மாநிலங்களவை எம்.பி.யாகப் பாஜக செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
மேலும்,வெற்றி பெற்றதற்கான சான்றிதழை செல்வகணபதி,தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமியிடம் பெற்றார். அவருக்கு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,பிரதமர் மோடி அவர்கள்,புதுச்சேரி எம்பி செல்வகணபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“புதுச்சேரியிலிருந்து முதல் முறையாக ராஜ்ய சபா எம்.பி.யாக பாஜக செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்பட்டது,ஒவ்வொரு பாஜகவினருக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை.மேலும்,இது புதுச்சேரி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து உழைப்போம்”,என்று குறிப்பிட்டுள்ளார்.
It is a matter of immense pride for every BJP Karyakarta that our Party has got it’s first ever Rajya Sabha MP from Puducherry in Shri S. Selvaganabathy Ji. The trust placed in us by the people of Puducherry is humbling. We will keep working for Puducherry’s progress.
— Narendra Modi (@narendramodi) September 28, 2021