ஒற்றுமை பயணத்தை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக – அசோக் கெலாட்
மக்கள் ஆதரவை கண்டு பயந்து பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என அசோக் கெலாட் ட்வீட்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், அதை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றசாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலையில் நிறைவடைந்தது. ஆனால், பாஜகவும், மோடி அரசும் இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டத்தைக் கண்டு மிகவும் பயந்து, ராஜஸ்தானில் கொரோனா நெறிமுறை பின்பற்றவில்லை என மத்திய சுகாதார அமைச்சர், ராகுல் காந்திக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை கண்டு பயந்து, பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. திரிபுராவில் 2 நாட்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றபோது கொரோனா விதிகள் பின்பற்றப்படவில்லை. கோவிட் இரண்டாவது அலையில், வங்காளத்தில் பிரதமர் பெரிய பேரணிகளை நடத்தினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கவலை நியாயமானதுதான், அவரது நோக்கம் அரசியல் இல்லை என்றால், முதல் கடிதத்தை அவர் பிரதமருக்கு தான் எழுதியிருக்க வேண்டும் எனவும் ராஜஸ்தான் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.