பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதால் சிக்கல் இல்லை!கண்துடைப்பா நம்பிக்கையில்லா தீர்மானம்……
தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன.
ஆந்திரா, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு கண்டு கொள்ளாததால், கடந்த வாரம் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு, தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் மக்களவை செயலாளரிடம் நோட்டீஸ் அளித்துள்ளன. மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நோட்டீசை எடுத்துக் கொள்ள இயலாது என்று சபாநாயகர் தெரிவித்தார். எனவே திங்களன்று அவை கூடும் போது நோட்டீஸ் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2014 பொதுத்தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 282 ஆக இருந்த பாஜக-வின் பலம், இடைத்தேர்தல்களுக்குப் பிறகு 275 ஆகக் குறைந்துள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பலத்திற்கு 272 எம்.பி.க்கள் தேவை என்ற நிலையில், 2 நியமன உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகரையும் சேர்த்து பாஜக-வின் பலம் 275 ஆக உள்ளது.
அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி, சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சி எம்பிக்களுடன் மொத்தம் 315 எம்பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். கூட்டணியில் இடம்பெற்றிருந்த போதும், பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள சிவசேனா கட்சிக்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே சிவசேனா ஆதரவு அளிக்காவிட்டாலும் கூட, நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இதுதவிர அதிமுக-வுக்கு 37 இடங்களும், பிஜு ஜனதா தளத்திற்கு 20 இடங்களும், சமாஜ்வாதிக் கட்சிக்கு 7 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 6 இடங்களும் உள்ளன. 5 மக்களவை இடங்கள் காலியாக உள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு 50 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தெலுங்குதேசம் கட்சிக்கு 16 இடங்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 9 இடங்களும் உள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரசுக்கு 48 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 34 இடங்களும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களும் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.