இலவசங்களை அள்ளி வீசிய பாஜக! குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் வெளியீடு!
குஜராத்தில் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட 40 முக்கிய வாக்குறுதிகள் வெளியிட்ட பாஜக.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த சமயத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது குஜராத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது.
குறிப்பாக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத். ஆகையால், அங்கு மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று முன்னணி பாஜக தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குறுதியில் இலவசங்களை அள்ளி வீசியுள்ளது பாஜக.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குறுதி பட்டியலை இன்று வெளியிட்டார். அதில், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு தரமான இலவச கல்வி திட்டம் அமல்படுத்தப்படும். கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி மற்றும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும். விவசாயிகளின் உள்கட்டமைப்புக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
எல்கேஜி வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை அனைத்து மாணவிகளுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் இளைஞர்கள் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கி மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம்.
இதுபோன்று, அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். மேலும், பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட 40 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதில் குறிப்பாக குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.