பாஜக சமீப காலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றது.இந்நிலையில் அடுத்த கட்டத்திற்கு கட்சியை கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே ஒவ்வொரு அமைச்சகத்தின் அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து படங்களுடன் நவீனமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள், வீடியோக்கள் என பொதுமக்களைக் கவரும் வகையில் அவை உள்ளன.
இதற்காக அக்கட்சியின் ஐ.டி. பிரிவு புதிய முகங்களுடன் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் நாட்டின் 716 மாவட்டங்களிலும் அலுவலர் நியமிக்கப்பட உள்ளார். மத்திய அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் பிரபலப்படுத்துவதோடு, மத்திய அரசுக்கு சாதக மாக நாளேடு மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் மூலம் இவர்கள் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இவை அனைத்தும் பொதுத்தேர்தலை முன்கூட்டியே சந்திக்கும் நோக்கமாக இருக்கலாம் என பேச்சு எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையிலான கருத்தை 2014 பொதுத்தேர்தலில் நரேந்திர மோடியின் டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமையேற்ற ராஜேஷ் ஜெயின் கூறியுள்ளார்.
பாஜகவுடன் தற்போது தொடர்பில் இல்லாத ராஜேஷ், இதுதொடர்பாக தனது பிளாக்கில், “அடுத்த பொதுத்தேர்தல் வர இன்னும் ஓர் ஆண்டு முழுமையாக உள்ளது. இந்த நேரத்தில் விவசாயிகள் பிரச்சினை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே அவற்றுக்கான பல தீர்வுகள் பொது பட்ஜெட்டில் இடம்பெறுவது அவசியம். இந்த அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு அடுத்த நூறு நாட்களில் பிரதமர் மோடி பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிடலாம். பிரதமரின் இந்த எதிர்பாராத அறிவிப்பை எதிர்க்கட்சிகள் சமாளிக்க முடியாமல் போகலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரை பொதுத்தேர்தல் என அழைக்கப்படும் இந்த மூன்று மாநில தேர்தல் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்று கோடிட்டு காட்டும். பாஜக ஆளும் இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சிக்கு எதிரான நிலை உள்ளது. இதில் ஒரு மாநிலத்தில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டாலும் அது பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …..