பீகார் சபாநாயகருக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்திய அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா உடனான கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதாவுடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 9வது முறையாக முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ்குமாருடன் 8 பேர் அமைச்சர்கள் பதவியேற்றனர். இதன்மூலம் பீகாரில் என்டிஏ கூட்டணியில் 128 எம்எல்ஏக்கள் உள்ளனர், எதிர்க்கட்சி (மகத்பந்தன்) 114 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது,
இனி வேறு எங்கும் செல்ல மாட்டேன்… 9வது முறையாக பீகார் முதல்வரான நிதிஷ்குமார் பேட்டி..!
எனவே, நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பது, இந்திய அரசியலிலும், இந்தியா கூட்டணி அரசியலிலும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பீகார் சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக பாஜக எம்எல்ஏ நந்த் கிசோர் யாதவ் நம்பிக்கையில்லா தீர்மனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் நேற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், சபாநாயகருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மகா கூட்டணி ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்தபோது ஆர்ஜேடி எம்எல்ஏ அவத் பிஹாரி சவுத்ரி சபாநாயகர் ஆனார். ஆனால், தற்போது அந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், ஆர்ஜேடி-யை சேர்ந்த சபாநாயகருக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸில் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், ஜேடியுவின் வினய் குமார் சவுத்ரி, ரத்னேஷ் சதா மற்றும் பல எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.