இரண்டு மாநில வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் குறித்து முடிவு செய்ய குழு!
குஜராத், இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்வதற்காக இரு முக்கிய தலைவர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை பா.ஜ.க. மேலிடம் அமைத்துள்ளது.
குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் ஆட்சிமன்றக் குழுவில் உள்ள முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் குஜராத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பொறுப்பு, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
இதேபோல் இமாச்சலப்பிரதேசத்தின் முதலமைச்சரை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன் மற்றும் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் தேர்வு செய்வார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
இந்த இரு குழுக்களும், குஜராத், இமாச்சலப்பிரதேசம் மாநிலங்களுக்குச் சென்று சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர், முதலமைச்சர் பற்றிய பரிந்துரைகளை மேலிடத்துக்கு வழங்க உள்ளன.
இதனிடையே, குஜராத்தில் உனா மாவட்டம் குத்லேஹர் தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ., வரிந்தர் கன்வார், தமது தொகுதியை பிரேம் குமார் துமாலுக்கு விட்டுக் கொடுப்பதாக கூறி உள்ள போதும், மேலிடத்தின் முடிவுக்காக முதலமைச்சர் வேட்பாளரான பிரேம் குமார் துமால் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
source: dinasuvadu.com