மீண்டும் பிரதமர் மோடி.! பாஜக தேசிய கவுன்சில் 2 நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் மாநில சிறிய கட்சிகள் வரையில் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வெகு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி அண்மையில் வெளிநாட்டு பயணத்தின் போது கூட 3வது முறையாக பிரதமராக வருவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்றும் நாளையும் டெல்லி பாரத் மண்டபத்தில் மக்களவை தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி , பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் டெல்லி பாரத் மண்டபம் வந்தனர்.
இன்றும், நாளையும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்.. சுமார் 11,000 நிர்வாகிகள் பங்கேற்பு.!
பிரதமர் மோடியை வரவேற்ற பின்னர், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாஜக கட்சியின் கொடியை பாரத் ஏற்றி வைத்து தேசிய மாநாட்டை துவக்கி வைக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நாடு முழுவதும் இருக்கும் பாஜக நிர்வகைகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும். பிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதாற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் என பல்வேறு தீர்மானங்கள் ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள், தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பாஜக மேயர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு முன்னணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த 2 நாள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று மாலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உரையாற்ற உள்ளார். நாளை பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.