முடிவுக்கு வந்த முதலமைச்சர் சஸ்பென்ஸ்? மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்பம்!
நாளை (டிசம்பர் 4) மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வரை பாஜக எம்எல்ஏக்கள் தேர்வு செய்வார்கள் என்றும், டிசம்பர் 5இல் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இப்படியான இமாலய வெற்றிக்கு பிறகும் முதலமைச்சர் சஸ்பென்ஸ் அங்கு நீடித்து வருகிறது. 132 தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்பதால் இந்த முளை முதலமைச்சர் பதவியை பாஜக விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தான் முதலமைச்சர் ரேஸில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.
இத்தகைய அரசியல் மாற்றங்களை அடுத்து தேவேந்திர பட்னாவிஸ் தான் பாஜக சார்பில் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இருந்தும் இதனை முறையாக அறிவிக்கும் பொருட்டு நாளை பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக பாஜக தலைமை சார்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாளை நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் (தேவேந்திர பட்னாவிஸ்) தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் , அமைச்சரவை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும். கூறப்படுகிறது .
ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் மறுத்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதனையும் ஸ்ரீகாந்த் ஷிண்டே மறுத்துள்ளார். “தான் துணை முதலமைச்சர் ரேஸில் இல்லை என்றும் , அமைச்சர் பதவியும் தங்களுக்கு வேண்டாம்” என தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது ஏக்நாத் ஷிண்டே உடல்நிலை சரியில்லை எனக்கூறி தானேவில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் வசித்து வருகிறார். அவரை நேற்று பாஜக மூத்த தலைவர் கிரிஷ் மகாஜன் சந்தித்து பேசியுள்ளார். நாளை (டிசம்பர் 4) மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் அறிவிக்கப்படுவார் என்றும் டிசம்பர் 5ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.