தொடங்கியது NDA ஆலோசனை.! பாஜகவின் திட்டம் என்ன.?
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
இதனை அடுத்து, இன்று NDA கூட்டணியில் உள்ள எம்.பிக்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டம், இன்று டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மேடையில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், குமாரசாமி உள்ளிட்டோர் அமர்ந்து இருந்தனர். பிரதமர் மோடி மேடைக்கு வருகையில் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். NDA எம்பிக்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியை ஒருமனதாக பிரதமராக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட உள்ளது. அடுத்ததாக கூட்டணி கட்சிகளுக்கான அமைச்சரவை துறைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையை நிதிஷ்குமார் கட்சிக்கும், விமானத்துறை, உலோகத்துறை மற்றும் துணை சபாநாயகர் பதவியை சந்திரபாபு கட்சிக்கும் கொடுக்கலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், நிதி மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியமான அமைச்சகங்களில் கூட்டணிக் கட்சிகள் மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.