சத்தீஸ்கரில் பாஜக தலைவர் மாவோயிஸ்டுகளால் வெட்டிக்கொலை!
சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு மாவோயிஸ்டுகளால் கொலை.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அவபல்லி பகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பிரிவுத் தலைவர் நீலகந்த் கக்கேம், அடையாளம் தெரியாத மாவோயிஸ்டுகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது பிஜப்பூரைச் சேர்ந்த பாஜக தலைவர் நீலகந்த் கக்கேம் (வயது 40), பைக்ராமில் உள்ள தனது பூர்வீக கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சென்றபோது, அடையாளம் தெரியாத மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கொண்டு தாக்கி வெட்டி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
பைக்ரம் கிராமத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில், கூரிய ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார் என்று காவல்துறை கூறியுள்ளது. அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவர் கொல்லப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அவப்பள்ளி காவல் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நடந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது என்று பாஸ்தர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி), பி சுந்தரராஜ் கூறினார். கொலைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, கடந்த 15 ஆண்டுகளாக உசூர் தொகுதி தலைவராக கக்கேம் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.