காவி நிறத்தை பூசி சர்ச்சையை கிளப்பிய பாஜக..!
உத்தரப்பிரதேச முதல்வராக பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதிலிருந்து அம்மாநிலத்தில் எங்கும் காவி நிறமே மேலோங்கி காணப்படுகிறது.
அரசு அலுவலங்கள், புதிய கட்டிடங்கள் என அனைத்திற்கும் காவி நிறத்தை பூசி வந்த பாஜக வினர், கடந்த மாதம் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறத்தை பூசினர். இச்சம்பவம் நாடுமுழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சிலைக்கு மீண்டும் நீல நிறம் பூசப்பட்டது. மேலும் முதல்வர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவி நிறமே மேலோங்கி காணப்பட்டது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் ரஷ்கான் அரங்கத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் யோகி ஆதித்யனாத் தலைமை தாங்கினார். யோகியின் வருகையையொட்டி விழா மேடை, தோரணங்கள் எல்லாம் காவி நிறத்திலும், காவி நிற திரைச்சீலை, காவி நிறப் பட்டைகள் என எல்லாம் காவியாக காட்சியளித்தது.
மேலும் அங்குள்ள கழிவறை சுவர்களில் இருந்த வெள்ளை டைல்ஸ் ஓடுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற டைல்ஸ் ஓடுகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் கழிவறையிலும் காவி நிற ஓடுகள் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னதாக அரசு நிதியில் கட்டப்பட்ட கழிவறைகளுக்கு உத்தரப்பிரதேச அரசு காவி நிறத்தை அடித்தது சர்ச்சையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.