மத்தியப்பிரதேசத்தில் பாஜக 100 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை ..!
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உட்பட 2,533 வேட்பாளர்களாக உள்ளனர். சிவராஜ் சிங் சவுகான், தனது கட்சி ‘பெரும்பான்மையுடன்’ ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில வாக்காளர்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக 165 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 62 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இந்தப் போக்குகளைப் பார்த்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியிலும், கமல்நாத் சிந்த்வாரா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
இருப்பினும், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஜோதிராதித்ய சிந்தியா தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிவு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.