இமாச்சலில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை.! பாஜகவின் கோட்டையாக மாறிய குஜராத்.!
இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருப்பதால், இந்தமுறை மாற்றம் நிகழும் என தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆட்சி மாறும் வரலாறும் உண்டு எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில், பாஜக, காங்கிரஸ் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர்.
தற்போது, பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் சரிக்கு சமமாக முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும், இமாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்படுகிறது. மறுபக்கம், குஜராத்தில் பாஜக 156 இடங்களில் அபார முன்னிலையில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர உள்ளது.
குறிப்பாக பாஜகவின் கோட்டையாக குஜராத் மாறியுள்ளது என்றே கூறலாம். மேலும், குஜராத்தில் இங்கு காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி 8 இடங்களிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.